Search

பொருந்தச் சொல்லாத பொய்கள்! PDF Print E-mail
Written by இரா.சம்பந்தன்.   

 

காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில் திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான் என்று தொடங்கிப் பாடு என்று முருகக் கடவுள் கனவிலே வந்து சொன்னதாக எண்ணிக் கொண்டு மிகப் பெரிய கவிதை நூலைப் படைத்து மறைந்த அவன் பெயர் கச்சியப்பன்.

சிவ ரககியம் முருகக் கடவுள் கந்தப் புராணம் போன்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவனை ஒரு கவிஞனாக மட்டும் எடுத்துக் கொண்டு அவன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பதிவைப் பார்ப்போம்.

தன் நூலை எழுதி முடித்த அவன் தொண்டை மண்டலத்திலே வாழ்ந்த கல்விமான்களையும் கவிஞர்களையும் அழைத்து தன் நூலை ஒரு நாள் வெளியீடு செய்யத் தொடங்குகின்றான். இன்று போல அழைத்ததுக்காக வந்து அவனைப் புகழ்ந்துவிட்டுப் போகும் அறிவாளிகள் அன்று இருக்கவில்லை. விழாவுக்கு வந்தவர்கள் அவன் எழுதிய இலக்கியத்தின் தரத்தை ஆராய்கின்றார்கள்.

மேடையிலே ஆய்வுரை செய்யப் புகுந்த புலவன் ஒருவன் திகழ் தசக்கர செம்முகம் ஐந்துளான் என்று கச்சியப்பன் பாடிய முதல் கடவுள் வாழ்த்திலேயே பிழை பிடித்து விடுகின்றான். தம்பி! பிரகாசிக்கும் பத்துக் கைகளும் சிவந்த முகங்கள் ஐந்தும் என்று சொல்வது எல்லாம் சரிதான்.

திகழ் தசக்கரம் என்பதைத் திகடசக்கரம் என்று புணர்த்தி இருக்கிறாயே இப்படிப் புணர்த்த தமிழிலே தொல்லாப்பியம் போன்ற நூல்களில் கூட இலக்கணம் இல்லையே. ஏன் இப்படித் தப்புச் செய்கிறாய்? அதுக்கு எங்காவது ஆதாரம் இருந்தால் காட்டிவிட்டு புத்தகத்தை வெளியீடு செய் என்று கூறி விட்டு மேடையை விட்டு இறங்கி விட்டான் தனது தமிழ்ப் பற்றால்.

கச்சியப்பன் இது தப்பு என்று எனக்கும் தெரியும். ஆனால் முருகக் கடவுள் கனவிலே சொன்ன சொற்றொடர் என்ற படியால் ஏற்றுக் கொண்டேன் என்று சொல்லிப் பார்த்தான். புலவன் விடவில்லை. முருகக் கடவுள் என்றாலும் இப்படிப் பிழையானவற்றை தமிழுக்கு கொண்டுவர அனுமதிக்க மாட்டோம். விரும்பினால் அந்த முருகனே வந்து தன் விளக்கத்தைச் சொன்ன பின்பு புத்தக வெளியீட்டைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டு வெளியே போய்விட்டான்.

நூல் வெளியீடு நின்று விடுகின்றது. கச்சியப்பன் கடவுள் சொன்தையே கருத்துப் பிழை என்று தடுத்து விட்டார்களே என்ற கவலையில் தூங்கினால் திரும்பவும் முருகக் கடவுள் கனவில் வந்து நாளைக்கு புத்தக வெளியீட்டைத் மீண்டும் நடத்து. நான் திகடசக்கரத்துக்கு ஆதரவாக இலக்கணப் புத்தகத்தோடு ஒரு படித்தவனை அனுப்புகிறேன் என்று என்று சொல்லி மறைந்தானாம்.

மறுநாளும் நூல் வெளியீட்டின் தொடர்ச்சி ஏற்பாடாகியது. சபையிலே புதிய புலவன் ஒருவன் சமூகம் அளித்து இருந்தான். அவன் எழுந்து தொண்டை மண்டலப் பெரியோர்களே நான் சோழ நாட்டுப் புலவன். இங்கே இலக்கணப் பிழை ஒன்றால் இலக்கிய நூல் ஒன்றின் வெளியீடு தடுக்கப்பட்டது அறிந்து வந்தேன். நான் படித்த வீரசோழியம் என்ற புத்தகத்திலே சந்திப்படலம் 18வது பாட்டிலே திகழ் தசக்கரம் திகடசக்கரம் ஆவதற்கு இலக்கண விதி சொல்லப்பட்டிருக்கின்றது பாருங்கள் என்று ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட புத்தகத்தை நீட்டினான்.

வாங்கிப் பார்த்தார்கள் கல்விமான்கள்.

ஐம்மூன்ற தாமுடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம்

மெய்ம்மாண்ப தாம்;நவ் வரின்முன் னழிந்துபின் மிக்கணவ்வாம்;

மம்மேல் வரினிரு மூன்றா முடல்;மற் றியல்புசந்தி

தம்மா சகலங் கிடப்பின்க ளாமென்ப தாழ்குழலே!

 

(வீரசோழியம் - சந்திப்படலம் - 18 வது பாடல்.)

 

என்ற பாடலைக் கண்டார்கள். எமக்கு இது தெரியாமல் போயிற்றே! எமது அறிவு தொல்காப்பியத்துடன் நின்று விட்டதே என்று வருந்தினார்கள். கச்சியப்பக் கவிஞன் தன் நூலை அரங்கேற்ற அனுமதித்தார்கள். வீரசோழியம் கொண்டுவந்த புலவனைத் தேடினாhகள். ஆவன் கிடைக்கவே இல்லை!

 

இதைச் சொல்வது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம் என்றால் அது தமிழர் தகவலில் இடம் பிடித்திருக்காது. ஆனால் கடவுளே உருவாக்கி இருந்தாலும் ஒரு தமிழ் நடையின் புதிய வரவொன்றை பழைய இலக்கண வாதிகள் திடமாக மறுதத் போது அந்தக் கடவுளே இன்னொரு நூலை ஆதாரம் காட்டி தான் சொன்னது சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய ஆரொக்கியமான சூழ்நிலை தமிழுக்கு இருந்திருக்கின்றது.

 

ஆதனால் தான் இன்று போலக் குப்பைகள் எல்லாம் புத்தகமாகி விடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்ல. வீரசோழியம் புத்த மதத்தைச் சார்ந்த பொன்பற்றிக் காவலர் புத்தமித்திரன் என்ற புலவனால் செய்யப்பட்டது. அதைப் பின்வரும் பாடலே காட்டும்.

 

மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்

தொக்கவன் யார்க்குந் தொடரவொண்ணாதவன் தூயனெனத்

தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்

புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றிமன்புத்த மித்திரனே

 

( வீரசோழியம் - பாயிரம்)

 

இந்து சமயத்தின் புத்தகம் ஒன்றின் இலக்கணத் தவறை அது தவறில்லை என்று நிலை நாட்ட முருகக் கடவுள் புத்த மதத்தின் புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டு வந்தான் என்பது பொருந்தச் சொல்லாத பொய்யா? அல்லது கடவுள் கூட மதங்கள் முக்கியம் இல்லை. தமிழ் தான் முக்கியம் என்று எண்ணிக் கௌரவம் பார்க்காமல் புத்த மத நூலை இரவல் பெற்று வந்தான். அதனால் நீங்களும் எந்த மதத்தைச் சார்ந்தவனானாலும் தமிழை வளக்க அவன் நூல் எழுதினால் படித்துப் போற்றிக் கொள்ளுங்கள்! என்று எங்களுக்கு அறிவுரை சொல்ல முன்னோர்கள் இந்தச் செய்திகளை வைத்துவிட்டுப் போனார்களா என்று தெரியவில்லை!

(தமிழர் தகவல் இதழ் பங்குனி 2016)